search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமுண்டீஸ்வரி தொகுதி மட்டுமே ஒதுக்கீடு - சித்தராமையா போட்டியிடாததால் வட கர்நாடகாவில் அதிருப்தி
    X

    சாமுண்டீஸ்வரி தொகுதி மட்டுமே ஒதுக்கீடு - சித்தராமையா போட்டியிடாததால் வட கர்நாடகாவில் அதிருப்தி

    முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிட கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதால் வட கர்நாடகாவில் சித்தராமையா ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா வடக்கு கர்நாடகத்தில் பாதமி தொகுதியிலும், தெற்கு கர்நாடகத்தில் மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார்.

    இதுதொடர்பாக மேலிடத்துக்கும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் கடந்த 15-ந்தேதி வேட்பாளர் தேர்வுக்குழு சார்பில் மேலிடம் வெளியிட்ட 218 வேட்பாளர்கள் பட்டியலில் முதல்-மந்திரி சித்தராமையாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவருக்கு சாமுண்டீஸ்வரி தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    பாதமி தொகுதி வேட்பாளராக தேவராஜ் பட்டீல் அறிவிக்கப்பட்டார். இது வடக்கு கர்நாடகா மாவட்டங்களில் சித்தராமையா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று வடக்கு கர்நாடக மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்களான எஸ்.ஆர். பட்டீல், ஜி.டி.பதி, எம்.எல்.ஏ. சீம்மணகட்டியின் மகன் மற்றும் பாதமி தொகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து முறையிட்டனர்.

    பின்னர் சித்தராமையா கூறுகையில், நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிடுவது என்பது மேலிடம் எடுத்த முடிவு. 2 தொகுதிகளில் யாரும் போட்டியிடக்கூடாது என்பது மேலிடம் எடுத்த முடிவு. எனது ஆதரவாளர்கள் பாதமி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தினார்கள். நான் மேலிடம் எடுத்த முடிவை தெரிவித்துவிட்டேன் என்றார்.

    இதற்கிடையே பாதமி தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதை தடுக்க மேலிட தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, வீரப்ப மொய்லி ஆகியோர் தான் தேவராஜ் பட்டீலை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    பாதமி தொகுதியில் குருபா இன மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். சித்தராமையா அந்த இனத்தைச் சேர்ந்தவர். எனவே பாதமி தொகுதிதான் அவருக்கு பாதுகாப்பானது என கருதப்பட்டது. ஆனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து 2 முறை வெற்றிபெற்றுள்ளார். அவர் சட்டசபைக்கு அடி எடுத்து வைத்ததும் இந்த தொகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×