search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி மோசடி விவகாரத்தில் ‘பிரதமர் மோடி மவுனத்தை கலைக்கவேண்டும்’ - ராகுல்காந்தி கடும் தாக்கு
    X

    வங்கி மோசடி விவகாரத்தில் ‘பிரதமர் மோடி மவுனத்தை கலைக்கவேண்டும்’ - ராகுல்காந்தி கடும் தாக்கு

    வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடியும், நிதிமந்திரி அருண்ஜெட்லியும் தங்களது மவுனத்தை கலைக்கவேண்டும் என்று ராகுல்காந்தி என்று கூறினார். #RahulGandhi #BankFraud
    புதுடெல்லி:

    வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடியும், நிதிமந்திரி அருண்ஜெட்லியும் தங்களது மவுனத்தை கலைக்கவேண்டும் என்று ராகுல்காந்தி என்று கூறினார்.

    மும்பையில் உள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய வர்த்தக கூட்டாளிகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டை காங்கிரஸ் கையில் எடுத்து பிரதமர் மோடியையும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வங்கி மோசடி குறித்து நேற்று தனது டுவிட்டர் பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    வங்கியில் நடந்த ரூ.22 ஆயிரம் கோடி ஊழலுக்கு பிரதமரும், நிதி மந்திரி அருண்ஜெட்லியும்தான் காரணம்.

    இந்த விவகாரத்தில் மோடியும், அருண்ஜெட்லியும் தங்களது மவுனத்தை கலைக்கவேண்டும். பள்ளி பொதுத் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்று மோடி 2 மணி நேரம் அறிவுரை கூறுகிறார். ஆனால் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி பற்றி இதுவரை அவர் 2 நிமிடம் கூட வாய் திறக்கவில்லை.

    நிதிமந்திரி அருண்ஜெட்லி இந்த விவகாரத்தில் ஒளிந்துகொண்டுள்ளார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பவர் போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு இதில் உண்மையை பேச முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வங்கி மோசடிக்கு பிரதமர் மோடிதான் நேரடியாக பொறுப்பானவர், நாட்டின் நிதி நிலை அமைப்பை சீர்குலைவுக்கும் அவர்தான் காரணம் என்று ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில் அவர் டுவிட்டர் பதிவில் இதுபோல் மீண்டும் கடுமையாக தாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×