search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல் நிவாரண நிதிக்காக ஒருமாத ஊதியத்தை வழங்க கேரள அமைச்சரவை முடிவு
    X

    ஒக்கி புயல் நிவாரண நிதிக்காக ஒருமாத ஊதியத்தை வழங்க கேரள அமைச்சரவை முடிவு

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இருக்கும் நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை வழங்க கேரள அமைச்சரவை முடிவு செய்ததுடன், நிதி வழங்க மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    தமிழகத்தின் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்களில் சூறையாடிய ஒக்கி புயலால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் புயலில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயலில் சிக்கி பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பும், பிரதமரின் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    பலியான மீனவர்களுக்கு திருமணமாகாத உடன் பிறப்புகள் இருந்தால், மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாயும், புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

    மீன்பிடி உபகரணங்கள், புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பினராயி கூறினார். நிவாரண நிதிக்காக அம்மாநில அமைச்சரவை தனது ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொழிலதிபர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பொது மக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க ரூ.1842 கோடியை கேரள அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×