search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
    X

    பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

    காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சி மற்றும் காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சி மற்றும் காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    சுதந்திர தின கொண்டாட்டங்களை தவிர்க்கும் விதமாக பிரிவினைவாதிகள் இந்த அழைப்பை விடுத்திருந்ததால் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஸ்ரீநகர் முழுவதும் முக்கிய இடங்களில் குண்டு துளைக்காத உடை அணிந்து ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

    முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தனியார் வாகனங்களும், அரசு பஸ்களும் எதுவும் இயக்கப்படவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க லால் சவுக் பகுதியை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் முள்வேலியால் மூடப்பட்டது. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. முழு அடைப்பையொட்டி ஸ்ரீநகரில் 2-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.

    இதேபோல் தெற்கு காஷ்மீரில் முக்கியமான பெரிய, சிறு நகரங்களிலும் பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடலாம் என்று கருதப்பட்டதால் அங்கும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    வடக்கு காஷ்மீரிலும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. மத்திய காஷ்மீர் மாவட்டங்களான கந்தர்பால், பத்காம் ஆகியவையும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    Next Story
    ×