search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாத இயக்கத் தளபதி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை போராட்டம்: இன்டர்நெட் சேவை நிறுத்திவைப்பு
    X

    தீவிரவாத இயக்கத் தளபதி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் வன்முறை போராட்டம்: இன்டர்நெட் சேவை நிறுத்திவைப்பு

    ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதனால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தளபதியாக சப்ஸார் அகமது பட் பொறுப்பேற்றுக் கொண்டான்.

    இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சாமு, டிரால் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கிராமத்தை தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில், சப்ஸார் அகமது பட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போராட்டம் வெடித்த பகுதியில், பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த மோதல்களில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. தொடரும் வன்முறைப் போராட்டங்களால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. வேலைக்குச் சென்ற பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளுக்குத் திரும்பினர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் சீக்கிரமாகவே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்ட நிலையில், வன்முறை மீண்டும் பரவத் தொடங்கியதால், இனறு இணையதள சேவைகளுக்கு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது.
    Next Story
    ×