search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி பிரதமரானதும் ஸ்டாலின் தமிழக முதல்வராவார்- ப.சிதம்பரம் பேச்சு
    X

    ராகுல் காந்தி பிரதமரானதும் ஸ்டாலின் தமிழக முதல்வராவார்- ப.சிதம்பரம் பேச்சு

    பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் முக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று ப. சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaran #rahulgandhi #mkstalin

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரியாளூர் விலக்கு ரோடு பகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.

    அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். இதைத்தான் தமிழக மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.


    எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து தயாராக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நாடு சோதனையில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி பிரதமரானார்.

    அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாத வாக்குறுதிகளான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றை கொண்டு வந்து இந்த நாட்டையே நாசப்படுத்தி விட்டார்.

    மதவெறி கொண்ட மோடி நாட்டை மதங்களின் பெயரால் தூண்ட நினைக்கிறார். இந்தியாவில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து பல லட்சம் பேர் வேலை இழக்க காரணமாகி விட்டார்.

    கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை நேரில் சென்று நான் பார்வையிட்டேன். ஆனால் நாட்டின் பிரதமர் பெயரளவிற்குகூட வந்து செல்லவில்லை. ஒரு வேளை புதுக்கோட்டை தனி நாடாக இருந்தால், வந்திருப்பார்போல. மத்தியில் காங்கிரஸ் கட்சியும், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்தவுடன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான நிவாரணம் வழங்கப்படும்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பார்த்து, இதை எப்படி செயல்படுத்த முடியும் எனக்கேட்ட பா.ஜ.க. இப்போதும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் எப்படி ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் எனக்கேட்கிறது. காங்கிரஸ் கட்சியும், நானும் என்றும் முடியாததை சொல்ல மாட் டோம். சொல்லியதை பா. ஜ.க. போல செய்யாமல் இருக்க மாட்டோம்.

    நிச்சயம் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். அதை காங்கிரஸ் செய்து காட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #pchidambaran #rahulgandhi #mkstalin

    Next Story
    ×