search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வலை மீன்களுக்கு அதிக கிராக்கி
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வலை மீன்களுக்கு அதிக கிராக்கி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடையால் அடைப்பு வலையில் பிடிபடும் மீன்களால் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் பலர் இந்த தொழிலை செய்து வருகின்றனர். இதில் விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று இறால், கணவாய் போன்ற ஏற்றுமதி செய்யக் கூடிய மீன்களை பிடித்து வருகின்றனர்.

    இதுதவிர நாட்டுப்படகு மற்றும் கட்டுமரம் வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல முடியாததால் கரைப்பகுதியில் இருந்து கடலில் சில குறிப்பிட்ட தூரம் துடுப்பு அல்லது பாய்மரம் மூலம் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலம் என்பதால் கடல் மீன்களின் இனவிருத்தி காலம் என மத்திய அரசு அறிவித்து அந்த சமயங்களில் மீன்பிடிக்க தடை செய்துள்ளது. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு நாட்களில் மீன்பிடி விசைப்படகுகளில் உள்ள எந்திரங்களில் உள்ள பழுதுகளை நீக்கி, உதிரி பாகங்களை மாற்றுதல் மற்றும் மீன்பிடி வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் கரைப்பகுதியில் இருந்து கொண்டு மீனவர்கள் அடைப்பு வலையில் பிடிக்கும் மீன்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மண்டபம், முனைக்காடு, வேதாளை உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் அடைப்பு வலையில் மீன்பிடிப்பதற்காக கரைப்பகுதியில் மீன் வலைகளை தடுப்புகளாக மாற்றி மீன் பிடித்து வருகின்றனர்.

    கரைப்பகுதியில் இருந்து சவுக்கு கட்டைகளை வரிசையாக கடலில் நிறுத்தி அதில் மீன்பிடி வலைகளை குறுக்கும் நெடுக்குமாக கட்டுகின்றனர். அலைகளின் நீரோட்டத்திற்கேற்ப வரும் மீன்கள் வலையில் சிக்கி கொள்கின்றன. தினமும் காலை 6 மணிக்கு பிடிபட்ட மீன்களை தரம் வாரியாக பிரித்து மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.

    நாட்டுப்படகில் பிடிபடும் மீன்கள் ஒருநாள் கழித்து இறந்த நிலையில்தான் கரைக்கு வரும். ஆனால் பட்டிவலையில் பிடிபடும் மீன்கள் உயிருடன் இருப்பதால் சுவையும் அதிகமாக உள்ளது.

    இதனால் மீன் மார்க்கெட் டில் நல்ல லாபத்திற்கு மீனவர்கள் விற்கின்றனர். பட்டிவலையில் பெரும்பாலும் பாறை, களவாய், ஊழி மற்றும் ஓரா போன்ற மீன்கள் அதிகம் கிடைக்கின்றன.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை உள்ளதால் கரைப்பகுதியில் இருந்து அடைப்பு வலையில் மீன்களை பிடித்து வருகிறோம். தற்போது விசைபடகுகள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பிடிபடும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இது ஓரளவிற்கு தடை காலத்தை சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
    Next Story
    ×