search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் -  வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இடி, பலத்த காற்றுடன் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, திருத்தணி, வேலூர் உள்பட ஊர்களில் ‘கத்திரி’ வெயில் அன்றாடம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி, மக்களை வாட்டி வதைக்கிறது. அதே வேளையில், வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகணூரில் தலா 5 செ.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர், லக்கூர், ஊட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், ஊத்தங்கரை, கரூர் மாவட்டம் பஞ்சபட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தர்மபுரி, போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் துறையூர், பெரம்பலூர் மாவட்டம் வென்மாவூர், சேலம் தம்மம்பட்டி, வாழப்பாடி, கரூர் மாவட்டம் மாயனூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஒரு சில இடங்களில் அனல்காற்று வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    12-ந்தேதி (நாளை) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×