search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி பாவனாவிற்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டினர்.
    X
    மாணவி பாவனாவிற்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டினர்.

    கவனம் சிதறாமல் படித்ததால் சாதிக்க முடிந்தது - பாலக்காடு மாணவி

    கவனம் சிதறாமல் படித்ததால் சாதிக்க முடிந்தது என சி.பி.எஸ்.இ. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி கூறினார். #CBSE
    கோவை:

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கேரள மாநிலம் பாலக்காடு டவுன் லயன்ஸ் பள்ளியில் படித்த குன்னத்தூர் மேடு பகுதியை சேர்ந்த மாணவி பாவனா சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

    சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், இயற்பியலில் தலா 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

    சாதனை படைத்த மாணவி பாவனா கூறியதாவது-

    கவனம் சிதறாமல் பாடங்களை முழுமையாக படித்ததால் சாதிக்க முடிந்தது. முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்பு வழங்கினார்கள். வருங்காலத்தில் என்ஜினீயராக விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி பாவனாவின் தந்தை நவீன் சிவதாஸ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாய் தீப்தி குடும்ப தலைவி ஆவார்.

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் கோவை புலியகுளம் வித்யா நிகேதன் பள்ளி மாணவி பி.காவியா வர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 3-வது இடம் பிடித்தார். அவர் எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

    கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. தமிழ்-99, ஆங்கிலம்-98.

    காவியா வர்ஷினி கோவை உப்பிலிபாளையம் சக்திநகரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை பாபு வர்த்தகம் செய்கிறார். தாயார் விமலா ராணி கோவையில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். காவியா வர்ஷினிக்கு ரித்திக் என்ற தம்பி உள்ளார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் அகில இந்திய அளவில் 3-வது இடத்தை பிடித்த மாணவி காவியா வர்ஷினி கூறியதாவது-

    வகுப்பில் நடத்தும் பாடங்களை நான் அன்றே படித்து விடுவேன். பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர தினமும் காலையும், மாலையும் 5 மணி நேரம் படிப்பதற்காக செலவிடுவேன். தனியாக டியூசன் செல்லவில்லை. எங்களுக்கு வகுப்பு ஆசிரியர்கள் நன்கு பயிற்சி அளித்தனர். அடிக்கடி தேர்வுகள் நடத்தி எங்கள் தகுதியை உயர்த்தினர். இதனால் தான் என்னால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது.

    எனது பெற்றோர் படிக்குமாறு நெருக்கடி கொடுக்கவில்லை. பாடங்களை புரிந்துபடி என்று மட்டும் சொல்வார்கள். அடுத்து அதே பள்ளியில் கணிதம், அறிவியல் குரூப்பில் பிளஸ்-1 சேர்ந்துள்ளேன். எதிர்காலத்தில் டாக்டருக்கு படிக்க ஆசை உள்ளது.

    500-க்கு 490 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 497 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 3-வது இடம் பிடித்ததை நம்பவே முடியவில்லை. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடங்களை புரிந்து படித்து கடினமாக உழைத்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

    இவ்வாறு காவியா வர்ஷினி கூறினார். #CBSE
    Next Story
    ×