search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    உளுந்தூர்பேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதுக்கேணி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது அன்றாட தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதி அடைந்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த புதுக்கேணி பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள திருச்சி-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள் பிரச்சினையை விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் கூறி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    Next Story
    ×