search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடு தீயில் எரிந்தது - மூதாட்டி பலி
    X

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடு தீயில் எரிந்தது - மூதாட்டி பலி

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    ரணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 70) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் சுகுணா (42). மகன் ராஜ்குமார் (35).

    சுகுணாவிற்கு திருமணமாகி சாந்தி வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் தாய் சாந்தி வீட்டில் இருந்து ஒயர் மூலம் மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு சுகுணா வீட்டிற்கு சென்ற மின் ஒயரில் திடீரென தீபிடித்து எரிந்து சாந்தியின் குடிசை வீட்டில் தீ பற்றியது காற்று அதிகமாக வீசியதால் தீ அருகில் இருந்த சுகுணா மற்றும் வினோத்குமார் வீடுகளிலும் மளமளவென பரவியது.

    சாந்தியால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தீ பற்றி எரிவதை கண்டு வெளியே ஓடிவந்த ராஜ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், மற்றும் போலீசார் சாந்தியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீகாயமடைந்த ராஜ்குமாரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை தீ விபத்து நடந்த வீடுகளை காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×