search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ் 2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் 2-ம் இடம் பிடித்தது
    X

    பிளஸ் 2 தேர்வு முடிவு: ஈரோடு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் 2-ம் இடம் பிடித்தது

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. #Plus2Results
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது.

    இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்களுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 95.37 சதவீதம் பெற்று முதல் இடம் பிடித்தது. ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 214 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 490 மாணவர்களும், 12 ஆயிரத்து 826 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினர்.

    இதில் 10 ஆயிரத்து 847 மாணவர்களும், 12 ஆயிரத்து 308 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.40, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.96 என மொத்தம் தேர்ச்சி சதவீதம் 95.23 ஆக உள்ளது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    இன்று வெளியான பிளஸ்-2 முடிவுகளை மாணவர்கள் தங்களது செல்போனில் எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் பார்த்து தெரிந்து கொண்டனர். அதுமட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் செல்போனிலும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.

    மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்கள் பட்டியல் ஓட்டி வைக்கப்பட்டிருந்தது. இண்டர்நெட் மையங்களிலும் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.

    நாளை முதல் 26-ந் தேதி வரை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மாதிரி ரேங்க் கார்டு வழங்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Plus2Results
    Next Story
    ×