search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் கலாச்சாரப்படி அயர்லாந்து பெண்ணுடன் தமிழக என்ஜினீயர் காதல் திருமணம்
    X

    தமிழ் கலாச்சாரப்படி அயர்லாந்து பெண்ணுடன் தமிழக என்ஜினீயர் காதல் திருமணம்

    அயர்லாந்து பெண்ணுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் கம்பம் வாலிபர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் மருது சக்கரவர்த்தி (வயது 35). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த அனெட் (32) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

    இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறியது. திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கு பிறகு கிராம பின்னணி கொண்ட கம்பம் நகரில் வசிக்க வேண்டும் என்று தனது காதலிக்கு மருது சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

    நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கையே சிறந்தது என அவரது காதலி தெரிவிக்கவே இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இந்து மத சடங்குகள் பின்பற்றப்பட்டு மணப் பெண்ணுக்கு பட்டுச்சேலை, மண மகனுக்கு பட்டு வேட்டி அணிவிக்கப்பட்டு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் நடந்தது.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அயர்லாந்து மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து வந்தது அங்கிருந்த கிராம மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அயர்லாந்து பெண்ணை கம்பம் வாலிபர் திருமணம் செய்த சம்பவம் கேள்விப்பட்டு அப்பகுதி முழுவதும் ஏராளமானோர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

    Next Story
    ×