search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் யார்?- போலீசார் விசாரணை
    X

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆண் குழந்தையை விட்டுச்சென்ற பெண் யார்?- போலீசார் விசாரணை

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? அவர் எதற்காக குழந்தையை விட்டு சென்றார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் கோவில் வளாகத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு நேற்று மாலையில் ஒரு பெண், ஒரு வயது ஆண் குழந்தையுடன் வந்தார். அவர் அந்த குழந்தையை பக்தர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் சன்னதி முன்பு போட்டுவிட்டு அங்கிருந்து நைசாக சென்று விட்டார்.

    சிறிதுநேரத்தில் அந்த குழந்தை அழுதது. இதனைப் பார்த்த கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தை யாருடையது என விசாரித்தனர். அப்போது சிறிது நேரத்திற்கு முன் ஒரு பெண் அந்த குழந்தையை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கோவில் முழுவதும் தேடினார்கள். ஆனால் அந்த பெண் அங்கு இல்லை.

    இதையடுத்து அந்த குழந்தையை கோவில் ஊழியர்கள் எடுத்து வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த குழந்தையை போலீசார் வாங்கி சென்று, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அந்த குழந்தை கோவில் பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அங்குள்ள செவிலியர்கள் மூலம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கோவில் வளாகத்தில் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? அவர் எதற்காக குழந்தையை விட்டு சென்றார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை விட்டுச்சென்ற பெண்ணை கண்டுபிடிக்க கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆனால் குழந்தையை பெண் கொண்டு வரும் காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. குழந்தையை கொண்டு வந்த பெண்ணை யாரும் பார்த்தார்களா? என்பது குறித்து கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடமும், கோவிலின் அருகே உள்ள கடைக்காரர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×