search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நாராயணசாமி நாயுடு மணிமண்டபம்.
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நாராயணசாமி நாயுடு மணிமண்டபம்.

    கோவை வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

    கோவை வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #Edappadipalaniswami
    கோவை:

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவுக்கு கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.

    இந்த அறிவிப்பின் அடிப்படையில் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு நினைவை போற்றி சிறப்பிக்கும் வகையில் அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டபேரவை விதி 110-ன் கீழ் 20.2.2016 அன்று அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விறுப்பாக முடிந்தது.

    சுமார் 2100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தில் நாராயணசாமி நாயுடுவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டு உள்ளது. மணிமண்டபத்தில் பின்புறம் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.பின்னர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்து வைத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.


    விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், எம்.பி.க்கள் ஏ.கே. செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண் குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டி மடை சண்முகம், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கஸ்தூரி வாசு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நாராயணசாமி நாயுடு குடும்பத்தினர். விவசாய சங்க தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் நாட்டு இன காளை கன்று பரிசாக வழங்கப்பட்டது. அருகில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளார்.

    நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாட்டு மாடு இன காளை கன்று ஒன்றை விவசாயிகள் பரிசாக வழங்கினார்கள்.

    மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் இருந்து காரில் விளாங்குறிச்சியில் உள்ள ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. வீட்டிற்கு சென்றார். அங்கு காலை உணவு அருந்தினார்.

    அதன் பின்னர் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வழி நெடுக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்து வரவேற்பு அளித்தனர்.

    செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #TNCM #Edappadipalaniswami

    Next Story
    ×