search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை பூங்காவில் படகு சவாரி தொடக்கம்
    X

    வைகை அணை பூங்காவில் படகு சவாரி தொடக்கம்

    வைகை அணை பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் வைகை அணை முக்கிய இடமாக உள்ளது. இங்குள்ள பூங்கா பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருப்பதால் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் பூங்கா பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. புல்தரைகள், கண்கவர் பொம்மைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், படகு குழாம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் கட்டும் பணி நிறைவடைந்தது.

    இதனையடுத்து 5 பெடல் படகுகள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி செயல்பாட்டுக்கு வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் படகு குழாமில் 2 பேர் செல்லும் 3 பெடல் படகுகளும், 4 பேர் செல்லும் 2 பெடல் படகுகளும் உள்ளன. 4 பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.170-ம், 2- பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யும்போது பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணிக்கு இன்னும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை கொண்டே பராமரித்து வருகிறோம். தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் (சனி, ஞாயிறு) இயக்க முடிவு செய்துள்ளோம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×