search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1,050 பள்ளிகள் பாதிப்பு - ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் அலைக்கழிப்பு
    X

    1,050 பள்ளிகள் பாதிப்பு - ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் அலைக்கழிப்பு

    ஆசிரியர்கள் போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் 1,050 தொடக்க மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் முற்றிலும் செயல்படாத நிலையில் முடங்கியுள்ளது. #JactoGeo
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பள்ளிகள் முற்றிலும் செயல்படாத நிலையில் முடங்கியுள்ளது.

    திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை என்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் அந்த பள்ளிகள் முழுவதும் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.

    ஆனால் கிராமப் புறங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால் மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சில பள்ளிகளில் மாணவர்கள் வாசலிலேயே காத்து கிடந்து பின்னர் செல்கின்றனர்.

    நீண்ட தூரத்தில் இருந்து பஸ்களில் வரும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்கள் மதிய வேளையுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    திருப்புதல் தேர்வு நடைபெறும் சமயங்களில் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வேதனையடைந்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று 59 அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட இருந்தது. இதற்காக இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் யாரும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவில்லை.

    இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எப்போது எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கும் என கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் போராட்டத்தால் 1,050 தொடக்க மற்றும் உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. #JactoGeo


    Next Story
    ×