search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி
    X

    அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி

    அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. கூறினார். #Kanimozhi #Ajith
    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் கூட்டம் நடைபெற்றது வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி முதல் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பேட்மாநகரம், பேரூர், முக்காணி, பழையகாயல் பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முத்தலாக் சட்டத்தில் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் பாதிக்கப்படுபவர்களின் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?. எனவே முத்தலாக் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை எதிர்ப்போம். கொடநாடு விவகாரத்தில் வக்கீல்கள் யாருக்காக வேண்டுமானாலும் ஆஜராகலாம். ஜாமீன் எடுக்கலாம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை வைத்து ஆஜராகக்கூடாது என எப்படி சொல்ல முடியும்.

    தலைமை செயலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் யாகம் வளர்த்தது தவறு தான். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின்போது கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. மத்திய-மாநில அரசுகள் 40 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை. சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இன்று தமிழகத்திற்கு எத்தனையோ நல்ல திட்டங்கள், தொழில் வளங்கள் வந்திருக்கும். மீனவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்திருக்கும். மத்திய-மாநில ஆட்சிகள் இத்திட்டத்தை நிறுத்தக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.

    பெரியார் கோவிலுக்குள் செல்லமாட்டார். ஆனால் அனைவரும் கோவிலுக்குள் செல்ல போராடியவர். கோவிலுக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என போராடியது தி.மு.க. ஆனால் போகக்கூடாது என சொல்வது பா.ஜ.க.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்டனர். அதற்கு அவர் அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார். #Kanimozhi #Ajith
    Next Story
    ×