search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி- அமைச்சர் சரோஜா தகவல்
    X

    அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி- அமைச்சர் சரோஜா தகவல்

    அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை கொண்டு வர திட்டம் உள்ளதாக அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். #TNMinister #Saroja
    நாமக்கல்:

    நாமக்கல்லில் அமைச்சர் சரோஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மொத்தம் 54,449 மெயின் அங்கன்வாடி மையங்கள் இருக்கிறது. 4,449 குறு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 17 லட்சம் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த ஆண்டு 2,519 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    குறிப்பாக அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை கொண்டு வரலாம் என்கிற திட்டம் உள்ளது.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் இருக்கின்ற அங்கன்வாடி குழந்தைகள் ஆங்கிலக் கல்வி பெறும் வண்ணம் நடுநிலைப்பள்ளியில் இருக்கின்ற ஆசிரியர்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கின்ற வகையிலே இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மிக விரைவில் தொடங்க இருக்கிறார்.

    அந்த வகையில் தமிழகத்தில் 2383 அங்கன்வாடி மையங்கள் நடுநிலைப் பள்ளியோடு இணைந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    பள்ளிக் கல்வித்துறையில் ரூ.6 கோடியே 50 லட்சமும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் ரூ.1 கோடியே 50 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் அடுத்த 3 ஆண்டுகளுக்கான இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார். பரீச்சார்த்த விதமாக இதை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த இருக்கின்றோம்.

    இதில் நடுநிலைப்பள்ளிக்கு வருகின்ற அங்கன்வாடி மையங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு 4 சீருடைகள், பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கின்ற மாதிரி புத்தகப் பை, ஷூ, சாக்ஸ்,  புத்தகங்கள், உபகரணங்கள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை கொடுக்கும். மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கொசுக்கடியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் சமூக நலத்துறை மூலம் 10 அடி நீளம், 5 அடி உயரம் உள்ள மஸ்கிட்டோ பாய் வழங்கப்படும். ஆகவே குழந்தைகள் படித்து விட்டு, சாப்பிட்டு தூங்கும்போது, அந்த குழந்தைகள் கொசுக்கடியில் இருந்து தேக ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வண்ணம் சமூக நலத்துறை இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.


    2383 அங்கன்வாடி மையங்களில் உத்தேசமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவிக்க இருக்கின்றார். இந்த திட்டத்தின் நோக்கம் வருகை குறைவதை தடுக்கவும், பெற்றோரின் பாரத்தை குறைப்பதே ஆகும்.

    எந்த ஒரு திட்டத்திலும் தொடங்கப்பட்டிருக்கின்ற அங்கன்வாடி மையங்களாக இருந்தாலும், சத்துணவுக் கூடமாக இருந்தாலும், பள்ளிகளாக இருந்தாலும் சரி மூடக்கூடிய எண்ணம் அரசுக்கு இல்லை.

    8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படும் என சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இது உண்மைக்கு புறம்பான செய்தி. சத்துணவு மையங்கள் மூடப்படமாட்டாது.

    நிர்வாக நலன் கருதி 25 குழந்தைகளுக்கு கீழே இருக்கின்ற குழந்தைகளுக்கு தேவையான சாப்பாடுகள் பக்கத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமைத்து ஒரு உதவியாளர் கொண்டு சென்று அந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அதனால் சத்துணவு திட்டத்துறையில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது.

    சில நிர்வாக சீர்திருத்தங்கள் சமூகநலத்துறையின் மூலம் எடுத்து வரப்படுகின்றது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மட்டுமில்ல. அரசு நலத்திட்டங்களில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லமுடியும். அவ்வாறு தவறு நடந்திருந்தால் அதிகாரிகள் மீது முறையாக விசாரணை நடத்தி உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Saroja
    Next Story
    ×