search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
    X

    எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

    எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #HIV #HIVBlood #Pregnantwoman

    விருதுநகர்:

    சாத்தூரில் 8 மாத கர்ப்பிணி பெண் உடல்நலக் குறைவுக்காக பெற்ற ரத்த தானம் அவருக்கு எமனாக மாறி இருக்கும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் கிருமிகளான எச்.ஐ.வி. கிருமிகள் கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதால் தற்போது அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி உள்ளது. மனதை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். 24 வயதாகும் அந்த பெண் குழந்தை பேறுக்காக சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அந்த பெண் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த குறைப்பாட்டை நீக்குவதற்கு உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணிடம் தெரிவித்தனர்.

    அந்த பெண்ணின் ரத்த வகை ‘ஓ பாசிடிவ்” ஆகும். அந்த ரத்தத்தை தானம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. பல்வேறு இடங்களிலும் கேட்கப்பட்ட பிறகு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ‘ஓ பாசிடிவ்’ ரத்தம் கையிருப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டது. கடந்த 3-ந்தேதி இந்த ரத்தத்தை அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றினார்கள். பிறகு அந்த பெண் வீடு திரும்பினார்.

    மறுநாள் அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி-வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அந்த பெண்ணை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

    8 மாத கர்ப்பமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. கலந்து இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த பெண்ணின் ரத்தத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்பம் உண்டானது முதல் கடந்த நவம்பர் மாதம் இறுதி வரை அந்த பெண் நல்ல சுகாதாரமாக இருந்தார். மாதந்தோறும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருந்தது.

    ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி டாக்டர்கள் ரத்தம் ஏற்றிய பிறகுதான் அந்த பெண்ணுக்கு பிரச்சினை வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரால் தானம் செய்யப்பட்டதாகும். அவர் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி இந்த ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் தானம் செய்து உள்ளார்.

    2016-ம் ஆண்டு முதல் இவர் ரத்த தானம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில் அவரது ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் எடுத்து சேமித்து வைத்து உள்ளனர்.

    முதலில் அந்த ரத்தம் ரமேசின் அண்ணி ஒருவருக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணிக்கு அந்த ரத்தம் ஒத்துவராததால் இருப்பு வைத்து விட்டனர். அந்த சமயத்தில்தான் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ‘ஓ பாசிடிவ்’ ரத்தம் தேவை என்ற தகவல் வந்து இருக்கிறது.

    உடனே சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் அந்த ரத்தத்தை எடுத்து சாத்தூருக்கு அனுப்பி விட்டனர். சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவில்லை.

    பரிசோதனை செய்யாமலேயே நம்பிக்கையின் அடிப்படையில் அந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தி விட்டனர். ஆனால் அது உயிருக்கே உலை வைக்கும் எமன் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

    உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகே கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்த ரத்தம் ஏற்றப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பொதுவாக ஒருவரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டதும் 5 விதமான சோதனை செய்வார்கள். அவ்வாறு 5 விதமான பரிசோதனைகள் செய்து இருந்தால் அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்து இருக்கலாம்.

    ஆனால் ரத்தத்தை முறைப்படி பரிசோதிக்காததால் அப்பாவி பெண் இன்று உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் அலட்சிய போக்கும் இந்த விபரீதம் ஏற்பட காரணமாகி இருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    ரத்த தானம் செய்த ரமேஷ் சமீபத்தில் வெளி நாடு செல்வதற்காக விண்ணப்பித்து இருந்தார். அதற்காக அவர் ரத்த பரிசோதனை செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது இருந்தது. அவர் ரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அறிந்ததும் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.உடனே அவருக்கு ஏற்கனவே நவம்பர் மாதம் 30-ந்தேதி ரத்த தானம் செய்து இருந்ததுதான் நினைவுக்கு வந்தது. அந்த ரத்தத்தை யாருக்காவது செலுத்தி விட்டால் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு விடுமோ என்று கவலை அடைந்தார்.

    உடனடியாக அவர் சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு சென்று தான் தானமாக கொடுத்த ரத்தத்தை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று மனிதாபி மானத்துடன் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

    கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டதற்கு சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களும், சாத்தூர் மருத்துவமனை ஊழியர்களும் தான் காரணம். 2 இடங்களிலுமே தானமாக பெறப்பட்ட ரத்தம் பரிசோதிக்கப்படவில்லை.

    இது தெரிய வந்ததும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார் அளித்தார். அதன்பேரில் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன்பேரில் முதல் கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    பொதுவாக ரத்த தானம் செய்யப்பட்டதும் அந்த ரத்தம் நல்ல ரத்தம்தான் என்று டாக்டர் ஒருவர் சான்றிதழ் அளிப்பார். ரமேஷ் தானம் செய்த ரத்தத்திற்கும் அவ்வாறு ரத்த வங்கியின் டாக்டர் சான்றிதழ் அளித்து உள்ளார்.

    அந்த ரத்தத்திற்கு எவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்டது என்று டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே எச்.ஐ. வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த ரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அந்த பெண்ணை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இருந்தனர். அங்கு அவருக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பெண் சாத்தூரில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம் சாணடோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவ மனையில் இருந்து மருந்து- மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே அந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தீவிர சிகிச்சை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் டெல்லியில் இருப்பதால் நாங்கள் வந்தோம். அவர் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண் இன்று புகார் அளிக்க குடும்பத்துடன் சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

    எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை வழங்கிய சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மூலம் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை, நோய் தொற்று தொடர்பான எந்த முறையான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இத்தகைய தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ரத்த சேமிப்புகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 89 ரத்த வங்கிகள் மற்றும் 357 ரத்த இருப்பு மையங்களிலும் மறு பரிசோதனையை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை ரத்த வங்கிகளில் இருந்து ரத்தத்தை மருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #HIV #HIVBlood #Pregnantwoman

    Next Story
    ×