search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் பணியின்போது கழிவுநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி
    X

    மெட்ரோ ரெயில் பணியின்போது கழிவுநீர் குழாய் உடைப்பு- பொதுமக்கள் அவதி

    திருவொற்றியூர் அருகே மெட்ரோ ரெயில் பணியின் போது கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவந்தியடைந்துள்ளனர்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் டோல்கேட் முதல் விம்கோ நகர் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.

    இதனால் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு தூசுகளால் வாகன ஓட்டிகளும் வியாபாரிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர் சென்னையின் மற்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் வேலை நடக்கும் போது அவர்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் போன்று வடசென்னையில் குறிப்பாக திருவொற்றியூரில் எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.

    மின்சார விளக்குகள் கூட பல இடங்களில் அமைக்கப்படாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக காலடிப்பேட்டை மார்க்கெட்டிலிருந்து எல்லையம்மன் கோவில் வரை கழிவுநீர் குழாய்கள் அகற்றப்பட்டது. ஒரு வாரத்தில் புதிய குழாய் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

    ஆனால் ஒன்றரை மாதங்கள் ஆகியும் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் அலுவலகங்கள் அம்மா உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் போக வழியில்லை. இதனால் அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த மழைநீர் கால்வாயில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரே உடைத்து உள்ளே கழிவு நீரைவிட்டனர். மழை நீர் கால்வாய் முழுவதும் கழிவு நீர் நிறைந்து இருக்கிறது.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தினசரி 2 லாரிகள் மூலம் கழிவு நீர் அகற்றப்படுகிறது. ஆனால் அதிக அளவில் கழிவு நீர் சேர்வதால் கழிவுநீர் பல இடங்களில் கொப்பளித்து வெளியே வந்து சாலையில் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் கழிவு நீர்குளம் போல் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீர் ஆழ்துளை குழாய் மூலம் சென்று எல்லையம்மன் கோயில் பகுதியில் தண்ணீர் குடிக்க பயனற்றதாக மாறி விட்டது.

    மேலும் மழைநீர் கால்வாயில் உள்ள சாக்கடை நாற்றம் அடிக்கிறது அது ஒரு கொசு உற்பத்தி பண்ணையாக மாறியுள்ளது எனவே மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×