search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் 14 ஆண்டுகளுக்கு பின் கைது
    X

    டாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் 14 ஆண்டுகளுக்கு பின் கைது

    திருச்சியில் டாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் 14 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி பாரதிநகர் 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவர் கால்நடை டாக்டர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 14.5.2004 அன்று தனது மனைவி கல்யாணியை அழைத்து கொண்டு ராஜாராமன் சென்னை சென்றார். வீட்டை பார்த்து கொள்ளும் பொறுப்பை திருச்சி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சரோஜா மற்றும் முத்து ஆகியோரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இருவரும் தினமும் வீட்டை பார்த்து வந்தனர்.

    30.5.2004 அன்று ராஜாராமன் வீட்டிற்கு சரோஜா வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ மற்றும் சூட்கேஸ் திறந்த நிலையிலும், அறையில் உள்ள பொருட்கள் சிதறியும் கிடந்தன. இது தொடர்பாக சென்னையில் இருந்த டாக்டர் ராஜாராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணம் இருந்ததாக கூறினார். எனவே, வீட்டின் பின்புறமாக கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் ராஜாராமன் வீட்டில் திருடியது திருப்பூர் மாவட்டம் பளஞ்சிபாளையத்தை சேர்ந்த விஜயன்(வயது34) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விஜயனை கைது செய்து, அவரிடம் இருந்து 10 பவுன் நகையை மீட்டனர். பின்னர் அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.

    விஜயன் மீதான வழக்கு விசாரணை திருச்சி 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட விஜயன், சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு(2017) டிசம்பர் மாதம், தலைமறைவான விஜயனை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என பிடிவாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து தலைமறைவான விஜயனை பிடிக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த விஜயனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவரை 14 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். மேலும், கைதான விஜயன் மீது புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் அவர் திருச்சி 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×