search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 24 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு- ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் அனுமதி
    X

    குமரி மாவட்டத்தில் 24 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு- ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் அனுமதி

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலியான நிலையில் 24 பேர் இதன் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #swineflu
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் பரவி வரும் பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு குமரி மாவட்டத்திலும் அதிகமாக உள்ளது.

    பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை தெரசா, கர்ப்பிணி பெண் சுகன்யா உள்பட 3 பேர் பலியாகி விட்டனர். இவர்களை தவிர இன்னும் ஏராளமானோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

    இதற்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் நேற்று 13 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிலருக்கு நோய் குணமானதை தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 2 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 5 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டம் முழுவதும் 24 பேர் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இவர்களில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் மட்டும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    10 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 24 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, குழித்துறை, குளச்சல் அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இது போல 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு, பன்றி காய்ச்சல் மட்டுமின்றி சாதாரண காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களால் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, குழித்துறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட சுகாதார துறை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்களும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்ட சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு மாத்திரைகள் வினியோகத்திலும் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வீடுவீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். #SwineFlu
    Next Story
    ×