search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டன பொதுக்கூட்டம் தொடர்பான தி.மு.க.வின் புதிய மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    கண்டன பொதுக்கூட்டம் தொடர்பான தி.மு.க.வின் புதிய மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

    கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க. கொடுக்கும் புதிய மனுவை போலீசார் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #DMK #ChennaiHighCourt
    சென்னை:

    தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு செய்தது. இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தனர். அனுமதி வழங்கப்படாததால், சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 23 இடங்களை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘செஞ்சியில் கோர்ட்டு தடைவிதித்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டதால் மறுக்கப்பட்டது. இதுபோல சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை என்று பல அம்சங்களை ஆராய்ந்து தான் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது’ என்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘அம்பத்தூர் முருகன் கோவில் அருகே பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், இந்த இடத்தில் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக டி.ஜி.பி. தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனால் இந்த இடத்தில் கூட்டம் நடத்தவிடாமல் உள்ளூர் போலீசார் தடுத்துவிட்டனர். இத்தனைக்கும் ஏற்கனவே அவர்கள் வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவில்லை’ என்று கூறி அந்த அனுமதி கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    மேலும் அவர், ‘சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுக்க முடியாது. சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது போலீசாரின் கடமை. அரசை கண்டித்து வருகிற 10 முதல் 15-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், ‘கூட்டம் நடத்த மறுக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தால், அந்த ஆதாரத்துடன் பொதுக்கூட்டம் நடத்தும் தேதியையும் குறிப்பிட்டு மீண்டும் தி.மு.க. தரப்பில் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை போலீசார் பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.  #DMK #ChennaiHighCourt
    Next Story
    ×