search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பல்லோ மருத்துவமனையில் முக ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை
    X

    அப்பல்லோ மருத்துவமனையில் முக ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #DMK #MKStalin #ApolloHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 28-ந்தேதி பதவி ஏற்றார்.

    அதற்கு பிறகு அவர் அதிக அளவில் வெளி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படும் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர் இரவு 11.30 மணிக்கு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

    சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது வலது கால் தொடையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அவர் தொடையில் இருந்த நீர்க்கட்டி அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நிலை நன்றாக உள்ளது. இன்று பிற்பகல் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் தி.மு.க. மூத்த தலைவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.



    ஸ்டாலின் நலமாக உள்ளார் என்று வைகோவும், தி.மு.க. மூத்த தலைவர்களும் நிருபர்களிடம் தெரிவித்தனர். இன்று பிற்பகலில் வீடு திரும்பும் மு.க.ஸ்டாலின் ஓரிரு நாட்கள் மட்டும் வீட்டில் ஓய்வு எடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எந்த பிரச்சினையும்இல்லை.

    கட்சிப் பணிக்காக அவர் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டதால் கடந்த 2 மாதமாக அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்லவில்லை. இதனால் அவர் காலில் நீர்க்கட்டி ஏற்பட்டு விட்டது.

    தற்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்து முடித்து விட்டனர். ஒன்று அல்லது 2 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் டி.ஆர்.பாலு கூறினார்.

    ஓரிரு நாட்கள் கழித்து மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். #DMK #MKStalin #ApolloHospital
    Next Story
    ×