search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூரில் பஸ் கவிழ்ந்து 38 பேர் படுகாயம்
    X

    வேப்பூரில் பஸ் கவிழ்ந்து 38 பேர் படுகாயம்

    வேப்பூரில் இன்று காலை பஸ் கவிழ்ந்து பீகாரை சேர்ந்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    வேப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலர் தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு பஸ்சில் ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். அந்த பஸ்சை பீகாரை சேர்ந்த முகமதுஅரிப் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் குறுக்கே இருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி  38 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 32 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 6 பேரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. விபத்தில் சிக்கி சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த  பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

    விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×