search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் தாலுகாவில் 1,500 ரேசன் கார்டுகள் ரத்து?
    X

    ஆத்தூர் தாலுகாவில் 1,500 ரேசன் கார்டுகள் ரத்து?

    ஆத்தூர் தாலுகாவில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறாததால் சுமார் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர் நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால், இப்பிரச்னையை கம்ப்யூட்டர் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை என அதிகாரிகள் சமாளித்தனர். ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நுற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு, இதுவரை ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வினியோகிக்கப்படவில்லை.

    புதிதாய் விண்ணப்பித்த பலரும், பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற புகார் கூறுகின்றனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கான பணிகளிலும் சுணக்கம் நீடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 14 மாதங்களுக்கு மேலாக, இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே சுமார் 1500 ரேசன் கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×