
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது செல்போனை பயன்படுத்துதல், சக மாணவர்களை செல்போனை பார்க்க வைத்து தொந்தரவு செய்வது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் கேலி, கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார்.
இந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் நேற்று பள்ளிக்கு வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலர் சி.டி.வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை பரிதா பிரேமா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபாபதி, துணைத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர் கல்வி அலுவலர் வீரமணி கூறுகையில், ’பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்றது. விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். #tamilnews