search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் போலீஸ்காரரை சரமாரி தாக்கி தப்பி செல்ல முயன்ற 3 பேர் கைது
    X

    பாளையில் போலீஸ்காரரை சரமாரி தாக்கி தப்பி செல்ல முயன்ற 3 பேர் கைது

    பாளையில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியவரை கைது செய்த ஆத்திரத்தில் போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி தப்பி செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நெல்லை;

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்தவர் நங்கமுத்து (23). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று நள்ளிரவு இவர் ஆட்டோவில் பாளையில் இருந்து முறப்பநாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கே.டி.சி. நகர் அருகே சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது ஆட்டோ லேசாக இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவரும், அந்த பகுதியில் சாலையில் நின்றவர்களும் கத்தி சத்தம் போட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் பாளை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்கள் சத்தம் போடுவதையும், ஆட்டோ வேகமாக வருவதையும் பார்த்து சுதாரித்து ஆட்டோவை மறித்து பிடித்தனர்.

    அப்போது ஆட்டோ டிரைவர் நங்கமுத்து குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த ஆட்டோவை பாளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறு அருகில் நின்ற போலீஸ்காரர் ஆரோக்கிய சாமியிடம் சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் கூறினார்.

    இதனால் போலீஸ்காரர் ஆரோக்கியசாமி அந்த ஆட்டோவை பாளை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது நங்கமுத்து ஆட்டோவை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் சென்ற முறப்பநாட்டை சேர்ந்த அவரது நண்பர்கள் மகராஜன் (24), இசக்கிதுரை (29), ஆறுமுககனி, லட்சுமணன் ஆகிய 4 பேரும் நங்கமுத்து ஆட்டோவை மறித்து ‘எங்கள் நண்பர் ஆட்டோவை எங்கே கொண்டு செல்கிறீர்கள்’ என்று போலீஸ்காரர் ஆரோக்கியசாமியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது போலீஸ்காரர் ஆரோக்கியசாமி, ‘தான் போலீஸ்காரர், அவரை கைது செய்து, ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ்காரர் ஆரோக்கிய சாமியை சரமாரி அடித்து உதைத்து, ஆட்டோவை அவர்கள் மீட்டு செல்ல முயன்றனர்.

    அப்போது போலீஸ்காரர் ஆரோக்கியசாமி மைக்கில் தகவல் தெரிவித்ததால், சப்- இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், ஆரோக்கியசாமியை தாக்கியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் போலீஸ்காரர்கள் தப்பி ஓட முயன்ற மகாராஜன், இசக்கிதுரை ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆறுமுககனி, லட்சுமணன் ஆகிய 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் புகாரின் பேரில் போலீஸ்காரர் ஆரோக்கிய சாமியை தாக்கியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து ரகளை செய்ததாகவும், பாளை போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைதான 3 பேர்களை தவிர மற்ற 2 பேர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×