search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
    X

    அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    அ.தி.மு.க.வில் எந்த வித உட்கட்சி பிரச்சினையும் இல்லை. ஒன்றாக இருந்து எதிர்வரும் தேர்தல்களை சந்தித்து வெற்றி பெறுவோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MinisterJayakumar #ADMK
    சென்னை :

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் ஜப்பான் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பெற்று உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருப்பதாலும் கட்டமைப்பு வசதிகள் இருப்பதாலும் இங்கு வருவதாக தொழில் முனைவோர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஜப்பானியர்கள் சூரை மீனை விரும்பி சாப்பிடுகின்றனர். ஜப்பானில் சூரை மீன் கிடையாது. ஜப்பானில் மீன்வளத்துறையில் 40 சதவீதம் முதலீடு செய்துள்ள நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

    மீனவர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக பயிற்சி செய்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் மீனவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    அரசியல் பண்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடித்து உள்ளது. ஆனால் கருணாநிதி புகழ் அஞ்சலியில் அரசியல் பண்பாட்டை தி.மு.க. ஏன் கடைபிடிக்கவில்லை என்று தி.மு.க.வினரிடம் தான் கேட்கவேண்டும்.



    அரசு கொள்கை முடிவு படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில் அரசு செயல்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு தனது கொள்கையில் பின்வாங்க போவதில்லை.

    கட்சி பணிக்காக பதவி இழக்க தயார் என்று துணை முதல்-அமைச்சர் பேட்டியளித்து இருந்தால் அதுபற்றி கருத்து சொல்லலாம். ஆனால் துணை முதல்-அமைச்சர் அப்படி பேசவில்லை என்று கூறியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் எந்த வித உட்கட்சி பிரச்சினையும் இல்லை. ஒன்றாக இருந்து எதிர்வரும் தேர்தல்களை சந்தித்து வெற்றி பெறுவோம்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் முல்லை பெரியாறு அணை பற்றி கருத்து கூறுவது நன்றாக இருக்காது. தமிழகத்தின் நலன், மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் வகையில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்.

    யார் குற்றம் செய்திருந்தாலும் அது குற்றம் தான். குற்றம் செய்தவர்களை காப்பாற்ற அரசுக்கு எண்ணம் கிடையாது. சட்டத்தில் என்ன வழிமுறை இருக்கிறதோ அந்த வழிமுறைப்படி குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

    பாலியல் தொல்லை தொடர்பான குற்றங்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×