search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் வினியோகம் செய்ய கோரி தஞ்சையில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் வினியோகம் செய்ய கோரி தஞ்சையில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    குடிநீர் வினியோகம் செய்ய கோரி தஞ்சையில், காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி முத்துசாமிநகர், ராதாகிருஷ்ணன் நகர், வி.எஸ்.காலனி, ஏ.கே.எல்.காலனி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி வைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள், காலிக்குடங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் சிலரும் குடங்களுடன் பங்கேற்றனர். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான ஆழ்குழாய் கிணற்றை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெண்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பெண்கள் சிலர் கூறும்போது, ஆறுகளில் தண்ணீர் நிரம்பி செல்லும் நேரத்தில் கூட நாங்கள் குடிநீருக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்படுகிறோம். வீட்டு வேலைகளும் செய்ய முடியவில்லை. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம் என்றனர். 
    Next Story
    ×