search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு
    X

    ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு

    இந்திய ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    சென்னை :

    சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியாக திகழ்கிறது. இப்பள்ளியின் 150-வது ஆண்டு தொடக்க விழா பள்ளி அருகே உள்ள ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து விளையாட்டு மற்றும் படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னாள் மாணவிகள் டாக்டர் வி.சாந்தா, பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகை லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு விருதுகளையும் அவர் வழங்கினார்.

    விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    ஒரு பள்ளி 150-வது ஆண்டுவிழா கொண்டாடுவது மிகச்சிறப்பு. இந்த பள்ளியில் படித்தவர்கள் நிறைய பேர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். டாக்டர் வி.சாந்தா, பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகை லட்சுமி ஆகியோர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள். அவர்கள் பேசுகையில் இந்த பள்ளியில் படித்த நாட்களை நினைவு கூருகிறோம் என்றனர். மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறக்காமல் கூறினார்கள். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு ஈடுபாடு இருந்துள்ளது.

    டாக்டர் வி.சாந்தா பேசுகையில் சீனிவாச சாஸ்திரி தனக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார் என்றார். நான் பிரமித்து போனேன். அவரைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனென்றால் சீனிவாச சாஸ்திரி பெரிய மனிதர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர். அவரிடம் ஆங்கிலம் படித்ததற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பத்தினருக்கு இந்த பள்ளி கல்வி வழங்கி வருவது பாராட்டத்தக்கது. இந்திய ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும். இந்த பள்ளியில் நல்ல குணத்தை மாணவிகள் பெற்றிருக்கிறார்கள். இந்த பள்ளியில் இருந்தும் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றிற்கு நிறைய மாணவிகளை உருவாக்கவேண்டும். முன்பு தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. போன்றவற்றில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் குறைந்து வருகிறார்கள். இதில், அவர்கள் கூடுதலாக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் “தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிக மாற்றங்களை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வருகிறது. அதன்படி பாடத்திட்டம் மாற்றப்பட்டு இந்த வருடம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வு, ஐ.ஐ.டி., சி.ஏ.தேர்வுகளுக்கு அடுத்த மாதம் முதல் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என்றார்.

    தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பள்ளியின் செயலாளர் லீலா, துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பேசினார்கள். டாக்டர் ஜெயவர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீதரன் நன்றி கூறினார். 
    Next Story
    ×