search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் பேட்டி
    X

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் பேட்டி

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். #IdolSmugglingCases #PonManickavel

    சென்னை:

    தமிழக போலீசில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன். மாணிக்க வேலுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ள தமிழக அரசு அது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.

    தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது. மீட்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கண்காணிப்பில் உள்ளன.


     

    மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோவில்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

    கடத்தப்பட்டுள்ள மற்ற சிலைகளை மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல்படும். அந்த போலீஸ் பிரிவை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. எனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஒரு சில வழக்குகள் மட்டுமே சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது.

    இதுபற்றி கோர்ட்டிலும் விளக்கம் அளித்துள்ளோம். சிலை கடத்தல் யார் ஆட்சியிலும் நடந்திருக்கலாம். அப்படி கடத்தப்பட்ட சிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் மீட்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நீடிப்பாரா? என்பதுபற்றி கருத்து கூற முடியாது.

    இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.

    Next Story
    ×