search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்கும் ரவுடிகள்- பொதுமக்கள் பீதி
    X

    அவனியாபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்கும் ரவுடிகள்- பொதுமக்கள் பீதி

    அவனியாபுரத்தில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்:

    மதுரை நகரில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சமூக விரோதிகள் தைரியமாக இந்த குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளான வில்லாபுரம், மீனாட்சி நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் பலர் செல்போனை ரவுடிகளிடம் பறிகொடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    எந்தவித பயமும் இல்லாமல் பட்டப்பகலிலேயே மோட்டார் சைக்கிளில் வரும் ரவுடிகள் தனியாக செல்வோரை வழிமறித்து கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்றும் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    அவனியாபுரம் அருஞ்சுனை நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 18). இவர் நேற்று பத்மா தியேட்டர் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 18 வயதுடைய 3 பேர் திடீரென்று சதீஷ்குமாரை அரிவாளை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.

    ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தைரியமாக ரவுடிகள் குற்றச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. திருடு போன செல்போனின் மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும்.

    இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுக்கள் முனியாண்டி, ராஜபாண்டி, இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×