search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னம் - சென்னையில் விடிய விடிய மழை
    X

    ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னம் - சென்னையில் விடிய விடிய மழை

    ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவானதால் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. #Storm #IndianWeatherCenter

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழையால் மழை பெய்து அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    சென்னையில் மழை இல்லாமல் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தும் குழாய் கிணறுகள் வற்றியும் போனதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது என்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்த நிலையில் ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவானதால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலையில் லேசாக மழை தூறியது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜில்லென குளிர் காற்று வீசியது.

    தொடர்ந்து இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை தூறியது.

    சென்னையில் நேற்று இரவு 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 3.32 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 3.64 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது. அதனுடன் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி இது தெற்கு தீபகற்பம் முழுவதும் நிலவுகிறது.

    இதன் காரணமாக ஒடிசா, தெலுங்கானா, ஆந்திராவிலும், வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தமானது அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக வால்பாறையில் 18 செ.மீ. மழையும், கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ. மழையும் பெய்துள்ளது. நீலகிரி நடுவட்டத்தில் 10 செ.மீ., நெல்லை பாப நாசத்தில் 9 செ.மீ, நீலகிரி தேவாலாவில் 8 செ.மீ., ஜி.பஜாரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி, பேச்சிப்பாறையில் 6 செ.மீ., தேனி பெரியாறில் 5 செ.மீ., பொள்ளாச்சியில் 4 செ.மீ., குளித்துறை, நாகர்கோவிலில் 3 செ.மீ., தென்காசியில் 2 செ.மீ., ராதாபுரம், ஆயிக்குடி, செங்கோட்டை, ஏற்காடு, குளச்சல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.  #Storm #IndianWeatherCenter

    Next Story
    ×