search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கலெக்டர்
    X

    தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கலெக்டர்

    தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிரூபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக கல்லணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி கல்லணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி, வெண்ணாற்றுக்கு 9 ஆயிரத்து 500 கன அடியும், கல்லணை கால்வாய்க்கு 3 ஆயிரம் கன அடியும், மீதமுள்ள தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்படும். கல்லணை கால்வாயில் தற்போது 2 ஆயிரத்து 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்விராயன் பேட்டையில் உள்ள தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் புகுந்தது. அதுபோன்று தற்போது நடைபெறாமல் இருக்க 10 கிலோ மீட்டருக்கு ஒரு பொதுப் பணித்துறை அதிகாரிகள் விதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் பேரிடர் பயிற்சி பெற்ற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×