search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்வாடி சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    ஏர்வாடி சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகம் 844-வது ஆண்டு சந்தனக் கூடு தேசிய ஒருமைப்பாட்டு திருவிழாவாக கோலாகலமாக நடந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தென் மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய புண்ணிய தலங்களில் பிரசித்தி பெற்றது. மத நல்லிணக்கத்திற்கு இந்த புண்ணிய தலம் கடந்த பல நூற்றாண்டுகளாக எடுத்துக் காட்டாக விளங்குகிறது. நாட்டின் பல இடங்களில் மனநலம் பாதித்த ஏராளமானோர் இங்கு வந்து தங்கி சிறப்பு வழிபாட்டிற்கு பின் குணமாகி வீடு திரும்புகின்றனர்.

    ஏர்வாடியில் சந்தனக் கூடு பிரபலமானது. பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 23 நாட்கள் விழா நடைபெறுகிறது.

    கடந்த 23-ந்தேதி அடி மரம் நடப்பட்டு, 24-ந்தேதி மாலை 5 மணியளவில் பேன்ட் வாத்தியம் இசையுடன் யானை, குதிரைகள் அணி வகுத்து வர கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சந்தனக்கூடு வாணவேடிக்கை வானில் வர்ணஜாலம் காட்ட ஊர்வலம் தொடங்கியது. விழாவையொட்டி தர்கா வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது. சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பட்டுச் சென்றதும் தர்காவில் விடிய, விடிய பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    சந்தனக் கூடு ஊர்வலம் யானை, குதிரைகள் ஒன்றன் பின் ஒன்று அணி வகுத்து வந்து ஏராளமான மக்கள் புடை சூழ இன்று அதி காலை 5 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவில் திரளாக நின்றிருந்த மக்கள் ‘‘ நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் என்ற கோ‌ஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலிக்க பக்தர்கள் மலர் தூவி சந்தனக்கூடை வரவேற்றனர்.

    பின் சந்தனப் பேழை மூன்று முறை தர்காவை வலம் வந்தது. இதன் பிறகு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    திருவிழா தொடர் நிகழ்வாக வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு சிறப்பு துவா நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டன. தர்கா வளாகத்தில் மதுரை மதினா லைட் நிறுவனர் ஜாகிர் உசேன் தலைமையில் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது.

    புக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கீழக்கரை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் இன்று (6-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். விழா ஏற்பாடுகளை ஹக்தர் பொது மகா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×