search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
    X

    நிலக்கோட்டை பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

    நிலக்கோட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஓரளவு பருவ மழை கைகொடுத்தது. ஆனால் நிலக்கோட்டை பகுதியில் மழை பெய்யவில்லை. ஆடி பெருக்கையொட்டி மழை பொழிவு இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் இந்த வருடமும் மழை ஏமாற்றி சென்றது.கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கோட்டை பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் வறண்டுள்ளதால் மலர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதனால் சிலர் விவசாயத்தை கைவிட்டு கோவை, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு வேலை தேடி சென்று விட்டனர்.

    தற்போது மழை இல்லை. வெயிலின் தாக்கமும் குறைவாகவே உள்ளது. ஒருவித குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்நடைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டன. கோழி கழிச்சல் நோய் மற்றும் மாடுகளும் நோய் தாக்குதலால் உயிரிழந்தன.

    தற்போது பொதுமக்களையும் வாட்டி எடுத்து வருகிறது. காய்ச்சல் கண்டவர்கள் முட்டிகளில் வலி, கண்களில் எரிச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே மருத்துவத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×