search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு - நள்ளிரவில் நடைபயணம் சென்ற கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் கைது
    X

    8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு - நள்ளிரவில் நடைபயணம் சென்ற கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் கைது

    சேலம் - சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபயணம் புறப்படும் நிகழ்ச்சி அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. போலீசார் நடைபயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    தடையை மீறி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைப்பயணம் புறப்பட்டனர்.

    அப்போது போலீசார் தடுத்து 44 பெண்கள் உட்பட 395 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களை இரவு 7.30 மணியளவில் விடுவித்தனர். ஆனால் அவர்கள், நாங்கள் வெளியே சென்றால் தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொள்வோம் என்றும், 100 பேருக்கு நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் போலீசாரிடம் கூறினர்.

    இதை தொடர்ந்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 15 பேர் கொண்ட குழுவினரிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சி.பி. சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து போலீசார் அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். வெளியே வந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் தலைமையில் நள்ளிரவில் 12 மணியளவில் அண்ணாசிலையில் இருந்து மீண்டும் நடைபயணத்திற்கு புறப்பட்டனர்.

    அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நடை பயணத்திற்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்ததால் அவர்களை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 பெண்கள் உள்பட 90 பேர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலையை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடைபயணம் தொடங்கியவுடன் போலீசார் தலைவர்களையும், ஊழியர்களையும் கீழே தள்ளி வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்து அடைத்துள்ளனர்.

    போலீசாரின் இத்தகைய ஜனநாயக விரோத, ஏதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    ஜனநாயக முறையில் நடைபெறும் நடைபயணத்தை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×