search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
    X

    திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

    திருமூர்த்தி அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

    உடுமலை:

    திருப்பூர் உடுமலை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரின் ஆணையின் படி இன்று முதல் திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு படுகை பாசனத்தில் முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வட்டத்தில் 27,446 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 7,492 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 8,395 ஏக்கரும், பல்லடம் வட்டத்தில் 7,887 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 11,309 ஏக்கரும் மற்றும் காங்கயம் வட்டத்தில் 15,392 ஏக்கர் என 77,921 ஏக்கரும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் 12,567 ஏக்கரும், மற்றும் சூலூர் வட்டத்தில் 4,033 ஏக்கர் என 16,600 ஏக்கரும் ஆக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சார்ந்த 94,521 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும், இன்று முதல் ஒரு சுற்றுக்கு மொத்தம் 1900 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அதிகரித்து வழங்கப்படும்.

    பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை வேளாண் மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி பயன் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தனியரசு எம்.எல்.ஏ., உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், திருமூர்த்தி அணை கோட்ட செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை, உதவி பொறியாளர் சண்முகம், உடுமலை தாசில்தார் தங்கவேல் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×