search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 கல்லூரி மாணவிகளுக்கு பத்திர முதிர்வு தொகை: கலெக்டர் வழங்கினார்
    X

    8 கல்லூரி மாணவிகளுக்கு பத்திர முதிர்வு தொகை: கலெக்டர் வழங்கினார்

    பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் 8 கல்லூரி மாணவிகளுக்கு பத்திர முதிர்வு தொகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 8 கல்லூரி மாணவிகளுக்கு வைப்புத் தொகை பத்திர முதிர்வு தொகை ரூ.3,27,296-க்கான காசோலையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது-:

    இரண்டு பெண் குழந்தைகள் பெற்றவர்கள் முதல்-அமைச்சரின்பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல் குழந்தைக்கு ரூ.50ஆயிரமும், இரண்டாம் குழந்தைக்கு ரூ.25 ஆயிரமும் பெறுவதற்கு தேவையான சான்றிதழ்கள் தாயின் பெயரில் பெறப்பட்ட குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் இருக்க வேண்டும். ஆண்டு வருமான சான்றிதழ் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழாக இருக்க வேண்டும்.

    இருப்பிட சான்று பத்து வருடங்களுக்கும், ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழும், தாய் மற்றும் தந்தையின் வயதுச் சான்று (மதிப்பெண் சான்று அல்லது மாற்றுச் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து வயதுச் சான்று), குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்று, தாய் மற்றும் தந்தையின் சாதி சான்று, குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைச் சான்று, அறுவை சிகிச்சையின் போது 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப புகைப்படம், பெற்றோர்களின் திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை மட்டும் இருந்தால் முதல் குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள்ளும், இரண்டாவது குழந்தை இருந்தால் இரண்டாவது குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.

    அனைத்து சான்றிதழ் களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனவும், தாய் இல்லை எனில் தாயின் இறப்புச் சான்றுடன் அனைத்து சான்றிழ்களும் தந்தையின் பெயரில் சமர்பிக்கப்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×