search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திலாஸ்பேட்டையில் கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் கைது
    X

    திலாஸ்பேட்டையில் கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் கைது

    திலாஸ்பேட்டையில் கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கோபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக திலாஸ்பேட்டையை சேர்ந்த ராமு மற்றும் இவரது சகோதரர் ரஞ்சித் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்களை கொலை செய்ய கோபியின் கூட்டாளிகள் முடிவு செய்திருந்தனர். இதே போல் கோபியின் கூட்டாளிகளை கொலை செய்ய ராமுவின் சகோதரர் ரஞ்சித் திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திலாஸ்பேட்டை மந்தைவெளி திடலில் கத்தியுடன் 4 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல்வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பலில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த புகழ், பிரசாந்த், புவனேஷ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் அப்பு என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் ரஞ்சித்தின் தூண்டுதலின் பேரில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கோபியின் கூட்டாளிகளை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அப்புவை தேடி வருகிறார்கள். #Murdercase

    Next Story
    ×