search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை
    X

    குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை

    கேரளாவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 3.8 செ.மீ. மழை பெய்தது.
    நாகர்கோவில்:

    கேரளாவில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து குமரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை ஆரம்பமானது. இந்த மழை ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு இறுதி வரை நீடிக்கும். அதன்படி, குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்தது. முதல் 2 வாரங்களுக்கு வெளுத்து வாங்கிய மழை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது.

    ஜூலை மாதம் தொடங்கியது முதல் மழையின் தாக்கம் குறைந்தது. கடந்த 2 வாரங்களாக மழை முற்றிலுமாக பெய்யவில்லை. மாறாக வெயில் கொளுத்தியது.

    இந்த நிலையில் கேரளாவில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதற்கேற்ப கேரளாவில் மீண்டும் மழை பெய்து வருவதை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கியது.

    நேற்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 3.8 செ.மீ. மழை பெய்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-14.2, பெருஞ்சாணி-4.8, சிற் றாறு-1-20, சிற்றாறு-2-19, மாம்பழத்துறையாறு-9, திற் பரப்பு-8, நாகர்கோவில்-15.2, பூதப்பாண்டி-6.4, சுருளோடு-10.2, பாலமோர்- 13, மயிலாடி-10.2, இரணியல்- 4.8, குளச்சல்-11, குருந்தன் கோடு-11.2, புத்தன் அணை- 8.6, கொட்டாரம்- 12.6.

    குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 406 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 11.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 757 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது. அணைக்கு 118 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 14.50 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 14.60 அடியாகவும் உள்ளது.

    மாம்பழத்துறையாறு அணை அதன் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது. பொய்கை அணையில் 15.20 அடி தண்ணீர் உள்ளது.

    பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தபடி இருந்தது. நாகர்கோவில், என்.ஜி.ஓ. காலனி, ராஜாக்கமங்கலம், மேலகிருஷ்ணன்புதூர், சுசீந்திரம், கொட்டாரம், பூதப்பாண்டி, சீதப்பால், திட்டுவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. குமரி மேற்கு மாவட்டத்திலும் பெரும்பாலான ஊர்களில் மழை பெய்தது.
    Next Story
    ×