search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு பருவமழை எதிரொலி - மீட்புகுழுவினர் தயாராக இருக்கும்படி நீலகிரி கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    தென்மேற்கு பருவமழை எதிரொலி - மீட்புகுழுவினர் தயாராக இருக்கும்படி நீலகிரி கலெக்டர் அறிவுறுத்தல்

    தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புகுழுவினர் தயாராக இருக்க வேண்டும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். இந்த மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்படுவதுடன், மரங்களும் சாய்ந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஊட்டியில் நடைபெற்றது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா, பேரிடர் இன்னல் பாதுகாப்பு பிரிவு தாசில்தார் ராம்குமார், மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், மருத்துவ துணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார், ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள புயல் நிவாரண மையங்களை மின் இணைப்புடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகள் தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள், மருத்துவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பெற வேண்டும்.

    நெடுஞ்சாலை, நகராட்சி பகுதிகளில் சாலைகளில் ஏற்படும் மண் சரிவு மற்றும் நிலச்சரிவுகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாட்களை தயார்படுத்தி வைக்க வேண்டும்.

    தீயணைப்புத்துறை அதிகாரிகள் மரம் அறுக்கும் மின்வாள் உள்ளிட்ட உபகரணங்கள் செயல்படுகிறதா என்பதை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 233 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கு உள்வட்ட வாரியாக ஏற்கனவே 13 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தற்போது தமிழ்நாடு அரசு சுற்றறிக்கையின் படி, ஒவ்வொரு குழுவிற்கும் அதிகபட்சமாக 5 முதல் 7 வரையிலான அபாயகரமான பகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 22 குழுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 35 குழுக்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்து விதமான பேரிடர்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஒரு குழுவில் 7 பேர் இருப்பார்கள். அருகில் உள்ள போலீஸ் நிலையங்களின் தொலைபேசி எண்கள் சம்பந்தப்பட்ட குழு அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×