search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள், கிராம மக்கள் போராட்டம் நீடிப்பு
    X

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள், கிராம மக்கள் போராட்டம் நீடிப்பு

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலம்:

    சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், மலைகள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதனால் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை தூண்டி விட்டதாக ஆச்சாங்குட்ட பட்டியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி முத்துக்குமார், அன்னதானப்பட்டியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

    சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மானூஷ் கடந்த மாதம் 3-ந் தேதி நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு அழைத்து வந்து 8 வழி விரைவு சாலை அமையும் பகுதிகளை காண்பித்தார். அப்போது நிரூபர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் சேலம் - சென்னை பசுமை வழிசாலை திட்டத்தை கைவிடா விட்டால் 8 பேரையாவது வெட்டி கொல்வேன் என ஆவேசமாக பேசினார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய தீ வட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதுபோல 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களையும், போராட்டத்துக்கு தூண்டி விடுபவர்களையும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்து வருகிறார்கள்.

     


    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஆட்சேபனை இருந்தால் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை அடுத்து கடந்த 14-ந்தேதி ஆட்சேபனை மனுக்களை விவசாயிகள் கொடுத்தனர். இதையடுத்து ஜூலை மாதம் 10-ந் தேதி கலெக்டர் தலைமையில் அடுத்த கட்ட கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அந்த கூட்டம் நடக்கும் வரை 8 வழி சாலைக்கு நில எடுப்பு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என அதிகாரிகள் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் சற்று அமைதியாக இருந்தனர்.

    ஆனால் அதிகாரிகள் நேற்று திடீரென 8 வழி பசுமை சாலைக்கான திட்டப்பணிகளை அதிரடியாக தொடங்கினார்கள். சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மஞ்சவாடியில் இருந்து அடிமலைப்புதூர், செட்டியார் காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, வலசையூர் பகுதியில் கையகப்படுத்த கூடிய நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணியில் மாவட்ட வருவாய்துறையினர் ஈடுபட்டனர்.

    முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் நிலங்களை அளந்து எல்லை கற்கள் நட்டதை பார்த்த விவசாயிகளும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விவசாய பயிர்களுக்கு நடுவே சாலை அமைப்பதற்கான எல்லை கற்களை நட்டனர். மஞ்சவாடி கணவாய் முதல் வலசையூர் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு நேற்று நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் நடப்பட்டது.

    இந்த சாலைக்காக 70 மீட்டர் அகலத்தில் விவசாய நிலங்கள் எடுக்கப்படுகிறது. பசுமையான தென்னை மரம், பூஞ்செடிகள், மாந்தோப்பு, கொய்யாதோப்பு, நெல் வயல்களுக்கு இடையே அளவீடு செய்ததால் அந்த பகுதி விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர்.

    ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவீடு செய்யும் பணி நடந்த போது அங்கு திரண்டு வந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாமலை என்பவர் தனது விவசாய நிலத்தில் படுத்து உருண்டு புரண்டு கதறி அழுதார். என்னை கொன்று விட்டு நிலத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கதறினார்.

    உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாமலை, அவரது மகன் ரவிச்சந்திரன், மருமகள் சுதா, சகுந்தலா, பிரகாஷ், நடராஜ் ஆகிய 6 பேரை கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்களை இரவில் விடுவித்தனர்.

    அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட உளவு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

     


    இந்த நிலையில் நேற்று மாலை ஓமலூரை அடுத்த ஆர்.சி. செட்டிபட்டியில் ஓமலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் போலீசாரிடம் சிக்கினார்.

    ஏற்கனவே இவரை போலீசார் போராட்டத்தை தூண்டி விடுவதாக தேடி வந்தனர். அவரை கண்டதும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். நேற்றிரவு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டபட்டி பகுதியில் 2-வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:- சேலம்- சென்னைக்கு 8 வழி பசுமை சாலை தேவையில்லாத திட்டம், பசுமையான விளை நிலங்களை அழித்து சென்னைக்கு விரைவாக செல்ல வேண்டுமா? தென்னை மரங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்துள்ளோம்.

    தற்போது எனது கண் முன்னே அதனை அழிக்க துடிக்கிறார்கள்.இதனால் மிகவும் மன வேதனையில் தவித்து வருகிறோம். ஜூலை மாதம் 10-ந் தேதி கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் திடீரென நில அளவீடு செய்யும் பணி மேற்கொள்வது அத்து மீறிய செயல், எனது நிலத்தில் எல்லை கல்லை நான் நடவிடவில்லை என்றார். #Greenwayroad #Farmersstruggle

    Next Story
    ×