search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளமடத்தில் புதுப்பெண்ணின் 10 பவுன் நகை- பணம் கொள்ளை
    X

    வெள்ளமடத்தில் புதுப்பெண்ணின் 10 பவுன் நகை- பணம் கொள்ளை

    நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தில் தாய் வீட்டில் தூங்கிய புதுப்பெண்ணின் 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் வேம்பத்தூர் காலனியைச் சேர்ந்தவர் லதா (வயது 30). இவரது கணவர் யோவிந்த் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

    கணவர் வெளிநாட்டுக்கு சென்றதால் லதா தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். நேற்று இரவு லதா மற்றும் பெற்றோர் வீட்டில் தூங்கினர். இன்று காலை அவர்கள் விழித்தெழுந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை , ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகள் அனைத்தும் புதுப்பெண்ணான லதாவுக்கு உரியவை ஆகும். அங்கிருந்த ஒரு ஜோடி கம்மல், ஒரு செயின், 3 மோதிரம், அரசு திருமண உதவியாக வழங்கிய 4 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

    நகைகள் கொள்ளை போனதால் லதாவும், அவரது பெற்றோரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    இதேபோல லதா வீட்டின் பக்கத்து வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லதா வீட்டின் அருகே வசிப்பவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் அவரது மனைவி ஸ்டெபி மற்றும் கார்த்திக்கின் தாயார் வசித்து வருகிறார்கள்.

    அவர்கள் 2 பேரும் திங்கள் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இரவில் அவர்களது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், வீடு முழுவதும் நகை, பணத்தை தேடியுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. இதனால் சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களை வீட்டு முன்பு கொண்டு வந்து போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா? அல்லது யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×