search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் வழக்கம் போல ஓடின
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் வழக்கம் போல ஓடின

    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்த நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் வழக்கம் போல இயக்கப்பட்டது.
    சேலம்:

    டீசல் விலையை 3 மாதத்திற்கு ஓரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரதமர், பெட்ரோலிய துறை மற்றும் சாலை போக்குவரத்துதுறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனாலும் மத்திய அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஏற்கனவே அறிவித்த படி ஜூன் 18-ந் தேதியான இன்று முதல் அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் வட மாநிலங்களில் லாரிகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் முக்கிய சங்கமான 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் தமிழகம் முழுவதும் இந்த சங்கத்தின் கீழ் இயங்கும் நான்கரை லட்சம் லாரிகள் வழக்கம் போல ஓடின. இதில் சேலம் மாவட்டத்தில் 32 ஆயிரம் லாரிகளும் ஒடியதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

    மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் ஜூலை மதம் 20-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்தது தான் எங்களது சங்கம். இந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு நான்கரை லட்சம் லாரிகள் இயங்குகிறது.

    இதில் மூன்றரை லட்சம் லாரிகள் தமிழகத்திற்குள் இயங்குகிறது. ஒரு லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் வழக்கம் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள மற்றொரு சங்கத்திற்கு எங்கள் ஆதரவு கிடையாது. அந்த சங்கத்தினருக்கு தமிழகத்தில் மிக குறைந்த அளவே லாரிகள் உண்டு என்பதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:

    இன்று தொடங்கியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் எங்களது சங்கம் பங்கேற்கவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரம் லாரிகளும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. #tamilnews
    Next Story
    ×