search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- கலெக்டர் அறிவிப்பு
    X

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- கலெக்டர் அறிவிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், மற்றும் 35 ஊராட்சிகள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவைகளுக்கு தடை விதித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டு நீலகிரி மாவடட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் மூலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், ஸ்டைலோஃபோம் தெர்மகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மோகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், புச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப் பயன்படும் பிளாஸ்டிக்குகள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டைகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் ஆகிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சில்லரை விற்பனையாளர் ½கிலோ ரூ. ஆயிரமும், மொத்த விற்பனையாளர்கள் ½ கிலோ ரூ.5 ஆயிரமும், திருமண மண்டபங்கள் ½ கிலோ ரூ. 20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே நீலகிரி மாவட்ட பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் மேற்கண்ட அறிவிக்கையினை பின்பற்றி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழலை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். #Tamilnews
    Next Story
    ×