search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
    X

    வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

    வாலாஜா அருகே ஊதுவத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    வாலாஜா:

    வாலாஜாவிலிருந்து வன்னிவேடு மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆற்காடு தெத்து தெரு உள்ளது. இங்கு கடந்த 20 வருடங்களாக ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு சென்ற பின்னர் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7½ மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில் தீ பயங்கரமாக பற்றி பரவ தொடங்கியது.

    இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக தொழிற்சாலை உரிமையாளருக்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை, சிப்காட், ஆற்காடு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் விற்பனைக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகள் மற்றும் தயாரிப்பு மூல பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பல் ஆகின.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×