search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்: ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்
    X

    4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்: ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்

    சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்.
    சென்னை:

    “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கடந்த 23-ந்தேதி டி.பி.ஐ. கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்- ஆசிரியைகளை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தங்க வைக்கப்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். சுமார் 2 ஆயிரம் ஆசிரியைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியைகளில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

    ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். போராட்டத்தில் அதிகளவு பெண் ஆசிரியர்கள் பங்கேற்றதால் போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.


    ஆனாலும் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர்கள் அனைவரையும் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு போலீசார் மாற்றம் செய்தனர்.

    ஆனால் அங்கும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக ஆசிரியர்களின் போராட்டம் நீடிக்கிறது. அவர்களை தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி சந்தித்து பேசினார். பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருநபர் கமி‌ஷன் அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். அதனை ஆசிரியர் பிரதிநிதிகள் ஏற்கவில்லை.

    இதற்கிடையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் சோர்வுற்று கடந்த 2 நாட்களாக மயங்கி விழுகிறார்கள். அவர்கள் ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    4-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் ஆசிரியர் - ஆசிரியைகள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். தண்ணீர் மட்டுமே குடித்து வந்த அவர்களில் சிலர் வயது முதிர்வு, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் போன்றவற்றால் மயக்கமடைந்து வருகிறார்கள். நேற்று வரை 80 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


    ஆசிரியைகள் அதிகளவு மயங்கி விழுவதால் போராட்ட மையத்திற்கே டாக்டர்கள் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். 2 மருத்துவர்கள், 2 நர்சுகள் அடங்கிய குழுவினர் வள்ளுவர் கோட்டத்தில் உஷார் நிலையில் உள்ளனர். மயங்கி விழும் ஆசிரியைகளுக்கு உடனடியாக அங்கேயே குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

    ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். இன்று காலையில் மிகவும் சோர்வடைந்த ஆசிரியர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டது.

    இதுவரையில் 113 பேர் மயங்கி விழுந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறப்பட்ட பின்னரும் சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்களை சந்தித்து பேசினார்.

    கல்வித்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் பிரச்சனையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று தொலைபேசி மூலம் வலியுறுத்தினார்.

    போராட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களை அழைத்து பேசி உடனடியாக தீர்வு காண வேண்டும். ஒரு நபர் கமி‌ஷன், நிதி நிலையை காரணம் காட்டி எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதை காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது.

    9 வருடமாக போராடி வருகிறோம். ஊதிய முரண்பாட்டை களைய அரசு உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவோம் இல்லையென்றால் தொடர்ந்து போராடுவோம் என்றனர்.  #Tamilnews
    Next Story
    ×